வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச்
சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல்
குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்துள்ளனர்.
ஊர் மக்களும் கூடி, பாடசாலையைத் திறக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த
பொலிசார் குற்றச்சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து,
கூடியிருந்த பொதுமக்களைக் கலைந்து போகச் செய்துள்ளனர். இந்தப் போராட்டம்
காலை 3 மணித்தியாலங்கள் நீடித்ததாகவும், போராட்டம் காரணமாகவும்,
மாணவர்களின் பகிஸ்கரிப்பு காரணமாகவும் பாடசாலை இன்று செயற்படவில்லை என்றும்
தெரியவருகிறது.
கடந்த செவ்வாய் கிழமையன்று பாடசாலை
முடிந்து வீடு சென்றவேளை, 7 வயது சிறுமியொருவரை அடையாளம் தெரியாதவர்கள்
கடத்திச் சென்று காட்டுப்பாங்கான காணியொன்றில் பாழடைந்த கிணற்றருகில் அவர்
மீது பாலியல் குற்றம் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாழடைந்த கிணற்றைச் சுத்தம் செய்வதற்காகச்
சென்றவர்கள் பற்றைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது, மாலை 4.30 மணியளவில்
சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு, அவரைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
சட்டையில் இரத்தம் தோய்ந்த நிலையிலும் வாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்த
நிலையிலும், கீறல் காயங்களுடனும் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி நெடுங்கேணி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
- வீரகேசரி








0 Comments:
Post a Comment